Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா பயணிகளுக்கு இனி ‘கேஎல்ஐஏ 2’ சேவைக் கட்டணம் இல்லை

ஏர் ஆசியா பயணிகளுக்கு இனி ‘கேஎல்ஐஏ 2’ சேவைக் கட்டணம் இல்லை

1851
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏர் ஆசியா விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஓர் அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டஸ் வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது விமான நிலையத்துக்கான சேவைக் கட்டணமாக இதுவரையில் வசூலிக்கப்பட்டு வந்த 3 ரிங்கிட் இனி அடுத்த வாரம் முதல் வசூலிக்கப்படாது எனக் கூறியுள்ள டோனி பெர்ணான்டஸ் நேற்று முகநூல் பக்கத்தின்வழி நடத்திய நேரலைக் கலந்துரையாடலில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இரண்டாவது விமான நிலைய நிர்வாகம், விமானப் பயணத்தை மலிவான கட்டணத்தில் வழங்கும் தங்களின் நிறுவனத்தின் நோக்கத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை என டோனி பெர்ணான்டஸ் இந்தக் கலந்துரையாடலின்போது குறை கூறினார்.

#TamilSchoolmychoice

சேவைக் கட்டணத்தை வசூலிப்பதில் கேஎல்ஐஏ 2 விமான நிலைய நிர்வாகத்திற்கும் ஏர் ஆசியாவுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் இருந்து வருகின்றன. விமான நிலையம் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்தி விதித்த 73 ரிங்கிட் கட்டணத்தை வசூலிக்க ஏர் ஆசியா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது.

விலை உயர்வுக்கு முன்னால் விதிக்கப்பட்ட 50 ரிங்கிட் கட்டணத்தை மட்டுமே ஏர் ஆசியா வசூலித்து வந்தது.

இதன் காரணமாக, ஏர் ஆசியா செலுத்தாத 9.4 மில்லியன் ரிங்கிட் தொகையை செலுத்த வேண்டும் என கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தை நிர்வகிக்கும், மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் ஏர் ஆசியாவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறது.

இதேபோன்று வசூலிக்கப்படாத 26.72 மில்லியன் ரிங்கிட் தொகையை செலுத்த வேண்டுமென ஏர் ஆசியா எக்ஸ் மீதும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.