Home நாடு கேமரன் மலை திருப்பம் – பூர்வகுடி வேட்பாளரை தே.முன்னணி நிறுத்துகிறது

கேமரன் மலை திருப்பம் – பூர்வகுடி வேட்பாளரை தே.முன்னணி நிறுத்துகிறது

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தற்போது திடீர் திருப்பமாக அந்தத் தொகுதியையும் மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

தேசிய முன்னணி சார்பில் அம்னோ வேட்பாளராக பூர்வகுடி வேட்பாளரான ரம்லி முகமட் நூர் என்ற முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி வேட்பாளராக கேமரன் மலையில் நிறுத்தப்படுவார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேமரன் மலைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவராக ரம்லி, செமாய் எனப்படும் பூர்வ குடி இனத்தைச் சேர்ந்தவர். காவல் துறையில் மிக உயரிய பதவி வகித்த பூர்வ குடி இனத்தவர் இவர்தான் எனவும் கூறப்படுகிறது. அசிஸ்டெண்ட் கமிஷனர் எனப்படும் துணை ஆணையர் பொறுப்பை காவல் துறையில் வகித்தவர் ரம்லி முகமட் நூர்.

#TamilSchoolmychoice

கேமரன் மலையை விட்டுக் கொடுக்கும் மஇகாவுக்கு பகாங் மாநில சார்பில் வழங்கப்படும் இரண்டு செனட்டர் பதவிகளில் ஒன்றை அம்னோ அடுத்த சுற்று வரும்போது விட்டுக் கொடுக்கும் என்ற உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகமான பூர்வகுடி வாக்காளர்கள் கேமரன் மலையில் இருப்பதால், நேரடியாகவே பூர்வகுடி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்திருக்கிறது தேசிய முன்னணி. இதன் மூலம், அண்மையக் காலமாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மூலமாக ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் பூர்வகுடி மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு நேர் எதிர் சவால் விடும் வகையில் ‘நாங்கள் வேட்பாளராகவே பூர்வகுடி வேட்பாளரை நிறுத்துகிறோம்’ என தேசிய முன்னணி கேமரன் மலையில் பிரச்சாரம் செய்ய முடியும்.

2004 முதல் 4 தவணைகளாக கேமரன் மலையைத் தற்காத்து வரும் மஇகா, இந்தத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுப்பதால் அங்குள்ள இந்தியர்களிடையே செல்வாக்கை இழக்கும் எனக் கருதப்படும் வேளையில் – இந்திய வாக்குகள் நம்பிக்கைக் கூட்டணிக்குச் சாதகமாகத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், கேமரன் மலை இடைத் தேர்தல் – சுவாரசியான இடைத் தேர்தலாக – மக்களிடையே விறுவிறுப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் தேர்தல் களமாக உருமாறியுள்ளது.

-இரா.முத்தரசன்