கோலாலம்பூர்: தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முருகக் கடவுள் வள்ளி மற்றும் தெய்வானையுடன் வெள்ளி இரதத்தில் பல வண்ண விளக்குகளுடன் வலம் வருவார் என மின்னியல் வல்லுனர் பி. ரவிசந்திரன் கூறினார். நாளை சனிக்கிழமை இரவு ஜாலான் துன் எச்எஸ் லீயிலுள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி இரதம் புறப்பட்டு, பத்து மலை முருகன் கோயிலை வந்தடையும்.
இம்முறை, ஒளி உமிழ்வு இருமுனைய (எல்ஈடி) விளக்குகளால், இரதம் முழுதும் அலங்கரிக்கப்படும் என்றார் ரவிச்சந்திரன். எல்ஈடி விளக்குகளைப் பயன்படுத்துவதால், உமிழப்படும் வெப்பத்தின் அளவைக் குறைக்க முடியும் என ரவிச்சந்திரன் கூறினார்.
இதற்கு முன்னர், சாதாரண விளக்குகளை (பல்புகளை) பயன்படுத்தி வந்ததாகவும், அவை 90 விழுக்காட்டுக்கும் அதிகமான வெப்ப ஆற்றலை வெளிபடுத்தியதாகவும் ரவிச்சந்திரன் கூறினார். ஆகவே, இம்முறை அதனைச் சரி செய்யவே எல்ஈடி விளக்குகளைப் பொறுத்தி வருவதாக அவர் கூறினார்.
வருகிற ஜனவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு வெள்ளி இரதம் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை விட்டு வெளியேறி, மறுநாள் மதியம் 3 மணிக்கு பத்து மலை வளாகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.