Home நாடு தமிழ் நேசன் : 95 வருட தமிழ் நாளிதழ் நிறுத்தப்படும் சோகம்

தமிழ் நேசன் : 95 வருட தமிழ் நாளிதழ் நிறுத்தப்படும் சோகம்

4753
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் – கடந்த 95 ஆண்டுகளாக மலேசியத் தமிழ் வாசகர்களையும், சிங்கப்பூர் தமிழ் வாசகர்களையும் மகிழ்வித்த தமிழ் நேசன் – எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது என்ற தகவல் தமிழ் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிகைகள் கடும் வணிகப் பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்டு வரும் வரிசையில் தமிழ் நேசனும் இணைகின்றது.

நீண்ட காலமாக மலேசியாவில் தமிழில் வெளிவரும் ஒரே பத்திரிகையாக விளங்கிய தமிழ் நேசன் வெளிவந்த காலகட்டத்தில் பல தமிழ் நாளிதழ்களுடன் வணிக ரீதியான போட்டியை எதிர்நோக்கினாலும், தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

பின்னர் 1960-ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில், தமிழ் முரசு என்ற பத்திரிகையுடன் போட்டியை தமிழ் நேசன் எதிர்நோக்கியது. தமிழவேள் கோ.சாரங்கபாணியால் தொடங்கப்பட்ட தமிழ் முரசு, கால ஓட்டத்தில் மலேசியாவில் நிறுத்தப்பட்டு, தற்போது சிங்கையில் மட்டும், அரசாங்கத்தின் ஆதரவில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ் முரசு நாளிதழுக்குப் பின்னர் தமிழ் மலர் என்ற பத்திரிகை என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையால் தொடங்கப்பட்டு, தமிழ் நேசனுக்குப் போட்டியாக சில ஆண்டுகள் வெளிவந்தது. ஆனால், இஸ்லாம் மதத்தை தரக் குறைவாக விமர்சித்த குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்ட காரணத்தால் தமிழ் மலர் உள்துறை அமைச்சால் நிறுத்தப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின்னர், தமிழ் மலர் நிறுவனம் “தினமணி” என்ற மற்றொரு புதிய பத்திரிகையை வெளியிட்டது. எனினும் அந்தப் பத்திரிகையும் கால ஓட்டத்தில் மூடுவிழா கண்டது.

1979-ஆம் ஆண்டில் துன் ச.சாமிவேலு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் நேசனை விலைக்கு வாங்கினார். அப்போது முதல், இப்போது வரை தமிழ் நேசன் துன் சாமிவேலு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இடைப்பட்ட காலத்தில், 1980-ஆம் ஆண்டுகளில் இளைய தமிழவேள் ஆதி.குமணனை ஆசிரியராகக் கொண்டு ‘தமிழ் ஓசை’ என்ற நாளிதழ் உதயமானது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல், சட்டப் பிரச்சனைகளால் தமிழ் ஓசை நிறுவனம் நீதிமன்றத்தால் மூடப்பட, தமிழ் ஓசை நாளிதழும் நிறுத்தப்பட்டது.

இதே காலகட்டத்தில், மலேசிய நண்பன் என்ற பத்திரிக்கை, டத்தோ சிக்கந்தர் பாட்சாவினால் சிறிது காலம் நடத்தப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தமிழ் ஓசை நிறுத்தப்பட்ட பின்னர் ஆதி.குமணன், மலேசிய நண்பன் பத்திரிக்கையின் நிர்வாகத்தை மேற்கொண்டு, அதன் ஆசிரியராக இருந்து அந்தப் பத்திரிக்கையை நடத்தினார். ஆதி.குமணனின் மறைவுக்குப் பின்னர் சிக்கந்தர் பாட்சாவின் குடும்பத்தினர் மலேசிய நண்பன் பத்திரிக்கையைத் தற்போது தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தமிழ் மலர் பத்திரிக்கை தற்போது மீண்டும் அதே பெயரில் புதிய வடிவமைப்புடன் மற்றொரு நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.

இன்றைய நிலையில், தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர் என நான்கு நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவின் மிகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு நிறுத்தப்பட – இனி 3 நாளிதழ்கள் மட்டுமே வெளிவரும்.

கடந்த 95 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களின் அரசியல், சமூகக் கண்ணாடியாகவும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியக் களமாகவும், மலேசியாவில் தமிழ் வளர்த்த – வளர்ந்த – காரணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்த தமிழ் நேசன் இனி வெளிவராது என்பது தமிழ் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்படுத்தும் முடிவுதான்!

-இரா.முத்தரசன்