சென்னை: தை அமாவாசையான இன்று இந்துக்கள் பொதுவாகவே முன்னோர்களுக்காக விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம்.
அவ்வகையில், இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் கடற்கரை மற்றும் இதர நீர் நிலைப்பகுதிகளில் ஒன்றுக் கூடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இன்று அதிகாலை முதலே ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அமாவாசை திதியானது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளென்றும், மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும் எனவும் கூறப்படுகிறது. ஆயினும், அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றிபெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இத்தினத்தில் பரிகாரம் செய்யப்படுகிறது.