புது டெல்லி: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தி உண்மையான தகவல்கள் பகிரப்படுவதை உறுதிச் செய்யும் முயற்சியில் சமூக வலைத்தளங்களை இந்திய மத்திய அரசு அணுகி வருகிறது.
பல்வேறு துறைச் சார்ந்தவர்களின் அன்றாட பிரச்சனையாக எழுவது இந்த போலியான தகவல் பகிர்வுதான். இதன் செயல்பாட்டை சமூக ஊடக நிறுவனங்கள் எவ்வளவு முயன்று வந்தாலும், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
இதற்கிடையே, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, இந்திய நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவினை 15 நாட்களுக்குள் சந்திக்க வேண்டும் என ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான குழு, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி டுவிட்டர் நிருவாகத்திற்கு ஆணை அனுப்பி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தது. ஆயினும், போதிய அவகாசம் அளிக்கவில்லை எனக் கூறி டுவிட்டர் அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றக் குழுவை சந்திக்கவில்லை. இதனால், 15 நாட்களுக்குள், டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவை சந்திக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.