ஈப்போ – ஒரு சட்டமன்ற உறுப்பினரின் காரே திருட்டுப் போன அவலம் – அதிலும் ஓர் அரசாங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது திருட்டுப் போயிருப்பது தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
பேராக் மாநிலத்தின் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியத்தின் (படம்) கார்தான் ஈப்போவிலுள்ள நிலம் மற்றும் சுரங்கங்களுக்கான இலாகா அமைந்திருக்கும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது திருடப்பட்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) மாலையில் இந்த கார் திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது என ஈப்போ காவல் நிலையத்தின் துணைத் தலைவர் (துணை ஓசிபிடி) உறுதிப்படுத்தினார்.
சிவசுப்பிரமணியத்தின் கறுப்பு நிற புரோட்டோன் பெர்டானா காரை அவர் பிற்பகல் 3.00 மணிக்கு நிறுத்தி விட்டுச் சென்றார். அதன் பின்னர் பிற்பகல் 4.30 மணிக்குத் திரும்பியபோது அவரது காரைக் காணவில்லை.
தனது அலுவலகம் அந்தக் கட்டடத்தில் அமைந்திருப்பதால் தினமும் தான் அங்கே வந்து, அதே இடத்தில் தனது காரை நிறுத்தி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக சிவசுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.
பூட்டப்பட்டிருந்த அந்தக் காரில் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் சிவசுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.