துபாய்: பாகிஸ்தானிய முன்னாள் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் பர்வேஷ் முஷாரப், உடல் நலக் குறைவால், துபாயில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்ததால் அங்கிருந்து சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை இரவு உடல் நலம் திடீரென மோசமடைந்தக் காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ஏபிஎம்எல்) செயலாளர் ஜெனரல் மெஹ்ரேன் ஆடாம் மாலிக் கூறினார்.
அமிலோய்டோசிஸ் எனப்படும் நோயினால் அவர் நலிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைக்கு அவருக்கு முழுமையான படுக்கை ஓய்வு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் ஆலோசனைக் கூறியுள்ளதாக கட்சி வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. முஷாரப்பின் உடல் நலம் தேறுவதற்கு நாட்டு மக்கள் பிரார்த்தனை மேற்கொள்ளும்படி கட்சி வட்டாரம் கேட்டுக் கொண்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு துபாய்க்கு சிகிச்சைப் பெறுவதற்கு சென்ற, முஷாராப் இதுநாள் வரையிலும் பாகிஸ்தான் திரும்பவில்லை என்றும், உடல் நலம் தேறியப்பிறகு மீண்டும் பாகிஸ்தான் வருவதற்கு அவர் ஆசைப்படுவதாகவும் கட்சி வட்டாரம் கூறியுள்ளது.