காஜாங்: அண்மையில் மூன்று இந்தோனிசியப் பணிப்பெண்களை கொடுமைப் படுத்தி சித்திரவதைச் செய்த டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவியின் மீது இன்று வெள்ளிக்கிழமை கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டப்பட்டது. பணிப் பெண்களை கொடுமைப் படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளக் காரணத்தால் அவர்கள் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.
25 வயது முதல் 41 வயது வரையிலும் உள்ள பணிப்பெண்களுக்கு முறையான சம்பளமும் தரப்படவில்லை என கண்டறியப்பட்ட வேளையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அந்த டான்ஶ்ரீயின் வீட்டில் பணி புரிந்து வந்த அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும், அப்பணிப் பெண்களின் கடப்பிதழ்களையும் அந்த டான்ஶ்ரீ தம்பதியினர் தங்கள் வசம் வைத்துக் கொண்டதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் 22-ஆம் தேதி, காஜாங்கில் உள்ள கண்ட்ரி ஹைட்ஸ் ஆடம்பர குடியிருப்புப் பகுதியிலிருந்து அம்மூன்று பணிப்பெண்களும் தப்பித்து வெளியேறி இந்தோனிசிய தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை வழங்கப்படும். 50,000 ரிங்கிட் பிணையில் அவர்களை விடுவித்த நீதிபதி பாட்னின் யூசோப், அவர்களின் கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி ஆணையிட்டார்.