சிங்கப்பூர் – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் கானிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம் நாள் சிங்கப்பூர் உமறுப் புலவர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.
எப்போதும் மாணவர்களைக் குழுவாக ஏதாவது ஒரு தலைப்பில் ஆராய்ச்சி விளக்கப் போட்டி நடத்தி ஊக்குவிக்கும் அந்த அமைப்பு, இந்த ஆண்டு “ எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
வெற்றி பெற்ற மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ வந்து தங்கள் ஆராய்ச்சி விளக்கத்தை வந்திருந்த பொதுமக்களுக்கு, தொழி நுட்பச் சொற்களுக்குகூட ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் தூய தமிழில் தங்கள் முடிவுகளைத் தந்த போது பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஜூராங் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் துவங்கிய “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பே அவர்களது அளவில்லா எதிர்பார்ப்பைப் பறை சாற்றியது. Productivity க்கான தமிழ்ச்சொல் பயன்முனைப்பு என்று அப்போது அறிய முடிந்தது. அகராதி இருக்க வேண்டும், நடைமுறைச் சூழல் உருவாக்கத்தில் (Artificial Intelligence) தமிழை எப்படிப் பயன்படுத்தலாம், அதிலும் Gamification என்ற முறையைப் பயன்படுத்தி, பயனீட்டாளரை விளையாட்டில் ஈடுபடுத்தி ஆர்வத்தை எப்படியெல்லாம் கூட்டலாம், மெய்நிகர் நடைமுறைச் சூழலில்(Virtual Reality) ஒருவர் தானே ஒரு சூழலில் உள்ளிருப்பது போல உணரும்வகை உள்ள உத்தியைப் பயன்படுத்தி எப்படி புராணக் கதைகளை மாணவர்களுக்குப் போதிக்கலாம், Gardens by the Bay யைப் போல சிங்கையில் இயற்கை மூலிகைத் தோட்டம் உருவாக்கலாம் என்று பல்வேறு தொலை நோக்குத் திட்டங்களை பட்டியல் இட்டு இறுதியில் விமானப் பயணச் சேவைகளையும் தமிழில் இருக்கும் வகை செய்ய வேண்டும் என்பது வரை, சிங்கை அரசுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்குத் திட்ட ஆலோசனை கூறுகிற அளவு ஒரு பெரிய பட்டியலையே முன் வைத்திருந்தனர் அந்தச் சிங்கை இளம் அறிவியல் அறிஞர்கள்.
அடுத்து வந்த செய்ண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் அருணா கந்தசாமி, ரோமா தயாள் இருவரும் , “தமிழின் தொன்மையும் உண்மையும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி உரை வழங்கினர்.தமிழோடு இணைந்த முனைவர் மன்னை இராசகோபால் அவர்களின் மாண்புமிகு மாணவர்கள் அவர்கள் என்பதை சொல்லாமலே உணர முடிந்தது. தமிழைப் பற்றிய பெருமை இளையர்களுக்குத் தேவை, கற்பனைதான் புதிய கண்டுபுடிப்புகளுக்கு உதவும் எனத் தொடங்கி, பழங்காலத்தில் கண் கொடுத்த கண்ணப்பன் வரலாற்றில் எப்படி சிந்தனை அளவில் உறுப்பு மாற்றம் கூறப்பட்டிருக்கிறது, மாண்ட கோவலன் மீண்ட போது வந்த புஷ்பக விமானம் சென்ற நூற்றாண்டின் விமானத் தொழில் நுட்பத்தை எப்படி முன்னரே கற்பனையில் வடித்திருக்கிறார்கள் என்பது போன்ற தொன்மைகளைப் பாராட்டினர்.
உச்சரிப்புத் தவறுகளை கண்டுபிடிக்க ஒரு செயலி, எழுத்துப்பிழைகளைக் கண்டு சொல்ல ஒரு மின்னியல் அகராதி என தேவைப் பட்டியலையும் அவர்கள் தங்களின் உரையில் சமர்ப்பித்தனர். 70% சதவீதம் பயன்படுத்தப்படும் NETFLIX தொழில் நுட்பத்தில் உள்ள வாய்ப்புகளை எவ்வாறு தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டும் என பல எதிர்ப்பார்ப்புகளை “உண்மை” என்ற தங்கள் தலைப்பின் பிற்பாதியில் விளக்கினர்.
அடுத்து இந்த மாணவர் திட்டத்தைப் பற்றி ஒரு சிறு காணொளி காட்டப்பட்டது. அதில் மாணவர்கள் 98% தமிழ்ச் சொற்கள் பயன்படு்த்தினர். நடுவர் தேன்மொழி கூறியது போல், தமிழ் மொழி விழாவின் நோக்கம் எவ்வாறெல்லாம் தன் இலக்கை எட்டியிருக்கிறது என்பதற்கு இது நல்ல சான்றாக விளங்கியது.