சென்னை – தமிழகத்தின் தமிழ் எழுத்தாளர்களில் வணிக ரீதியாக, பொதுமக்கள் அதிகம் படிக்கும் வார இதழ்களில் ஏராளமாக எழுதி பிரபலமாக இருப்பவர்கள் பலர். ஆனால் ஒரு சிலரோ, வெகு சொற்பமாகவே எழுதி, அந்தக் குறைந்த படைப்புகளில் தங்களின் எழுத்து வன்மையையும், திறமையையும் எடுத்துக்காட்டி, தங்களின் வட்டார மொழி நடையையும் தங்களின் படைப்புகளில் புகுத்தி, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் எழுதுவது கூட குறைந்த அளவே விற்பனையாகும் சிற்றிதழ்களில்தான்! ஆனால் அத்தகைய படைப்புகள்தான் நவீன தமிழ் இலக்கியத்தை உயிர்ப்புடன் காலத்தையும் கடந்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.
அத்தகையோரில் ஒருவர் கடந்த மே 10-ஆம் தேதி தனது 75-வது வயதில் நெல்லையில் மறைந்த தோப்பில் முகம்மது மீரான்.
மலையாளத்திலும் தமிழிலும் எழுதும் ஆற்றல் படைத்த முகம்மது மீரான் தமிழில் 5 புதினங்கள், 6 சிறுகதைகள் மற்றும் சில மொழிபெயர்ப்பு நூல்களை மட்டுமே எழுதியிருந்தாலும், 1997-ஆம் ஆண்டில் இவரது ‘சாய்வு நாற்காலி’ என்ற நூல் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது, இவரது எழுத்துத் திறனுக்கான எடுத்துக் காட்டு.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், கடற்கரையோரக் கிராமமான தேங்காப்பட்டினத்தில் 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்த இவர் பின்னாட்களில் தனது வட்டார மொழியையும், தான் பார்த்து வளர்ந்த கடலோர மக்களின் வாழ்வியலையும், தனது எழுத்துக்களில் பதிவு செய்தார். தனது இஸ்லாமியம் மதம் சார்ந்த மக்களின் வாழ்வியலையும் முகம்மது மீரான் தனது படைப்புகளில் கொண்டு வந்தார்.
மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபாடு காட்டி வந்த முகம்மது மீரான் 6 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
முகம்மது மீரானின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஓர் இழப்புதான் என்றாலும், அவர் விட்டுச் சென்றிருக்கும் அவரது படைப்புகள் அவரது பெயரை எந்நாளும் தமிழ் மொழியின் வரலாற்றில் கல்வெட்டாய் பதியச் செய்திருக்கும்.
அவரைப் போன்று எழுதுவதைத் தவமாக மேற்கொண்டு தமிழ் மொழியை வளப்படுத்தும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தொடர்ந்து உருவாகி தமிழை ஆராதிப்பார்கள் – வட்டார மொழி படைப்புகளை உருவாக்குவார்கள் – தமிழை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள் – என்று நம்பிக்கைக் கொள்வோம்.
-இரா.முத்தரசன்