Home இந்தியா இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 9 : தேனி – தங்கத் தமிழ்ச்...

இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 9 : தேனி – தங்கத் தமிழ்ச் செல்வனா? ஓபிஎஸ் மகன் ரவீந்திர குமாரா?

1219
0
SHARE
Ad
தேனி நாடாளுமன்றத்திற்கான அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன்

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தமிழ் நாடு மொத்தமும் உற்று நோக்கப் போகும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவு தேனி நாடாளுமன்றத்தின் முடிவாகத்தான் இருக்கும்.

மதுரையை அடுத்துள்ள தேனி நாடாளுமன்றம் தமிழக மக்களின் கவனத்தைத் திசை திருப்பியிருப்பதற்குக் காரணம் இங்கு மோதும் மூன்று கட்சிகளின் முக்கியத் தலைகள்!

பாரம்பரியமாக தேனியில் செல்வாக்குப் படைத்த அதிமுக சார்பில் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தனது மகன் ரவீந்திர குமாரை அதிமுக வேட்பாளராகக் களமிறக்க, ஓபிஎஸ் மீது எப்போதும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் டிடிவி தினகரனோ தனது அமமுக சார்பில் தங்கத் தமிழ்ச் செல்வனைக் களமிறக்கியுள்ளார்.

தேனி நாடாளுமன்றத்திற்கான அதிமுக வேட்பாளர் – ஓபிஎஸ் மகன் – ரவீந்திர குமார்
#TamilSchoolmychoice

தினகரனின் அசைக்க முடியாத தங்கத் தளபதிகளில் ஒருவர் தங்கத் தமிழ்ச் செல்வன். தனது வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதிலும் அமமுக சார்பில் அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதிலும், தமிழக மக்களிடையே மிகப் பிரபலமாக இருக்கும் முகம் தமிழ்ச் செல்வனுடையது!

தேனி நாடாளுமன்றத்தின் கீழ் வரும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தைக் கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் அடுத்து வந்த 2016 தேர்தல்களிலும் வெற்றி கொண்டவர், அதிமுகவின் அரசியல் சூதாட்டத்தில் தனது சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதியை இழந்தார். இப்போது தேனி நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறார்.

தேனி நாடாளுமன்றம் – காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

இவர்கள் இருவருக்குமான போட்டியே கடுமையாக இருக்கும் பட்சத்தில் கோமாளித்தனமாக திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன். இவரும் என்னதான் காங்கிரசின் அதிரடி பேச்சாளர்களில் ஒருவர், அடிக்கடி சர்ச்சைகளைக் கொளுத்திப் போடுபவர் என்றாலும் ஈரோட்டுக்காரரான இவருக்கு மதுரை, தேனியில் என்ன வேலை என அரசியல் பார்வையாளர்கள் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

எனவே, போட்டி என்னவோ ரவீந்திர குமாருக்கும், தங்கத் தமிழ்ச் செல்வனுக்கும்தான்! அதிலும் தேனி நாடாளுமன்றத் தொகுதி ஓபிஎஸ்-சுக்கும் தினகரனுக்கும் இடையிலான பலப் பரிட்சையாகப் பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், திமுக வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது எனக் குற்றம் சாட்டி வந்த அதிமுக கட்சியிலிருந்தும் வாரிசு அரசியல் உருவெடுக்கிறது என்பதற்கு உதாரணமாக, ஓபிஎஸ் தனது மகனையே நாடாளுமன்ற வேட்பாளருக்கும் நிறுத்துவது அதிமுக அடிமட்ட உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.

அதிமுக சார்பில் உருவாகியிருக்கும் இன்னொரு வாரிசு அரசியல் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னையில் போட்டியிடுவது! ஆனால், ஜெயவர்த்தனை கடந்த பொதுத்தேர்தலிலேயே ஜெயலலிதாவே தேர்வு செய்தார் என ஓரளவுக்கு சப்பைக் கட்டு கட்டி வருகிறார்கள்.

ஆனால், ஓபிஎஸ் துணை முதல்வராக இருக்கும்போதே அவரது மகனை தேனியில் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்திருப்பது அதிமுக வட்டாரங்களில் நிறைய சலசலப்புகளை உருவாக்கியிருக்கிறது. இவையெல்லாம் மே-23 தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா என்பது அன்றுதான் தெரியவரும்.

ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்களிப்பு நடந்து முடிந்த நிலையில் தேனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் மட்டுமின்றி, தமிழக மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

-இரா.முத்தரசன்