கோலாலம்பூர்: மலாய்க்காரர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நிலையிலான கருத்து வேறுபாடுகள் அவ்வினதை மேலும் துண்டாக்கி வருகிறது என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் கருத்துரைத்துள்ளார். இம்மாதிரியான சூழல்கள் கவலை அளிப்பதாக அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலாய்க்காரர்களின் நலனுக்காக போராடுகிறோம் எனக் கூறி, ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் மோசமடையச் செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். அவர்களின் முகத்தில் அவர்களே கரியை பூசிக் கொள்ளும் செயலாக இது அமைகிறது என்று அவர் கூறினார்.
மலாய்க்காரர்கள் வெளிப்படையாக தம்மினத்தைச் சார்ந்தவர்களை கீழ்தனமாகவும், பொறாமை, மற்றும் பழிவாங்கும் எண்ணத்தோடு கருத்துகளை சமூகப்பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் முன்வைக்கும் போது இந்நிலை மேலும் மோசமாகிறது என சுல்தான் கூறினார்.
இம்மாதிரியான சூழல்கள் மலாய்க்காரர்களை பல்வேறு நிலைகளில் நட்டமடையச் செய்வதோடு, மதம், பொருளாதாரம், அரசியல், கல்வி போன்ற விசயங்களில் அவர்களின் சுதந்திரத்தை இழக்கக்கூடிய நிலையையும் ஏற்படுத்திவிடும் என சுல்தான் எச்சரித்தார். இவ்வாறான நிலைகளில் பிறர் அந்த சலுகைகளை பெற்றுக் கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.