Home நாடு “டோமி தோமஸ் பதவி விலக வேண்டும்” – எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

“டோமி தோமஸ் பதவி விலக வேண்டும்” – எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

818
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீதான மரண விசாரணை தொடர்பில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் பதவி விலக வேண்டும் என்றும் முகமட் அடிப் மரணம் குறித்து அரச விசாரணை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

முகமட் அடிப் மரண விசாரணையில் நேரடியாகவும் பகிரங்கமாகவும் தலையிட்டிருப்பதன் வழி டோமி தோமஸ் தனது பதவிக்குரிய நேர்மையைக் காக்கத் தவறி விட்டார் என அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

“அடிப்பின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்டு வரும் மரண விசாரணையில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஹம்டான் ஹம்சா சமர்ப்பித்திருக்கும் சத்தியப் பிரமாண ஆவணத்தில் அடிப் யாரும் தாக்கியதால் மரணமடையவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனவே, அடிப் எப்படி மரணம் அடைந்தார் என்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்துவிட்டது போல் தோன்றுகிறது” என்றும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அம்னோ, பாஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து முகமட் அடிப் மரணம் குறித்து அரச விசாரணை வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தில் தீயணைப்பு முகமட் அடிப் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தக் காயங்களின் காரணமாக அவர் டிசம்பர் 17-ஆம் தேதி தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.

அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நீதிமன்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.