சான் டியேகோ: சான் டியேகோ மருத்துவமனையில் வெறும் 245 கிராம் எடைக் கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளதாக என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தக் குழந்தையின் எடை என்பது பெரிய அளவிலான ஆப்பிளின் எடையளவு எனக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகச் சிறிய குழந்தை இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் குழந்தைக்கு சபே என்று பட்டப் பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்து, ஒரு மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று தெரிவித்தனர். ஆயினும், ஒரு மணி நேரம் இரண்டு மணிநேரமாகியும். அதன்பின் ஒரு வாரமாக ஆகிவிட்டது என்று மருத்துவமனை வெளியிட்ட காணொளியில் குழந்தையின் அம்மா தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தை எடுக்கப்பட்டது. 23 வாரங்கள் 3 நாட்கள் கர்ப்ப பையில் இந்த குழந்தை இருந்துள்ளது. வழக்கமான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்களுக்கு நீடிக்கும். தீவிர சிகிச்சை பிரிவில் ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வைத்து பார்த்ததில் தற்போது குழந்தையின் எடை 2.2 கிலோ கிராமாக கூடியுள்ளது.
இக்குழந்தை அற்புதமானவள், வாழ்வதற்கான போராட்ட குணம் அவளுக்கு இருந்தது என்று மருத்துவமனை செவிலியர் பெருமையுடன் கூறுகிறார்கள்.