Home இந்தியா 4-வது முறையாக கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா

4-வது முறையாக கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா

786
0
SHARE
Ad

பெங்களூரு – (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா நான்காவது முறையாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் பதவி ஏற்றுக் கொண்டார்.

பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு மாநில ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தான் விவசாயிகளின் தோழன் – காவலன் என்பதைக் குறிக்கும் வண்ணம் எடியூரப்பா பச்சைத் துண்டை அணிந்து பதவியேற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

கர்நாடக மாநிலத்தின் 25-வது முதல்வராகப் பதவியேற்கும் எடியூரப்பா எதிர்வரும் திங்கட்கிழமை ஜூலை 28-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமெனவும் கர்நாடக மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டும் இணைந்து நடத்தி வந்த ஆட்சியில் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராகப் பதவி வகித்தார்.

அண்மையில் நடந்து முடிந்து இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, கர்நாடக மாநில ஆட்சியில் பிரச்சனைகள் வெடித்தன.

அந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து பெரும்பான்மையை இழந்த குமாரசாமியின் கூட்டணி அரசு, கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து குமாரசாமி பதவி விலகினார்.

தற்போதைய நிலையில் அதிகமான சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் பாஜகவின் மாநிலத் தலைவர் என்ற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைத்திருக்கிறார்.

அடிக்கடி குறுகிய காலகட்டத்திலேயே ஆட்சியை இழந்திருக்கும் எடியூரப்பா இந்த முறை தொடர்ந்து நீடிப்பாரா அல்லது திங்கட்கிழமை தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் மீண்டும் பதவியை இழப்பாரா?

திங்கட்கிழமை – ஜூலை 29-ஆம் தேதி தெரிந்து விடும்!