“நெருப்போடு விளையாடுவது ஒருவரை மட்டுமல்ல ஓர் ஊரையே அழித்து விடும்” என்றும் சுல்தான் அப்துல்லா எச்சரித்தார்.
பாரம்பரியமும், கலாச்சாரமும் இணைந்த நிகழ்ச்சியில் இன்று சுல்தான் அப்துல்லா 16-வது மாமன்னராக முடிசூட்டப்பட்டார்.
பல இன, மத மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், சகிப்புத் தன்மையை மேம்படுத்துவதற்கும் மாமன்னர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யப் போவதாகக் கூறியதோடு மக்கள் அமைதிக்காக கலந்துரையாடல் மன்றம் ஒன்றை நிறுவும் அரசாங்கத்தின் முயற்சிக்கும் வரவேற்பு தெரிவித்தார். “மக்களுக்கே நான் முதலிடம் தருவேன். மூத்தவர்களுக்கு மரியாதை தரும் அதே வேளையில் இளையவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்” என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி தனது தந்தையார் அமரர் சுல்தான் அகமட் ஷா நாட்டின் ஏழாவது மாமன்னராகப் பதவியேற்றுக் கொண்ட அதே அரியணையில் இன்று தானும் அமர்வதை, அல்லாவின் சித்தம் எனக் கூறிய மாமன்னர், தனது தந்தையார் மாமன்னரானபோது 4-வது பிரதமராக இருந்த மகாதீர் 39 வருடங்களுக்குப் பிறகு தான் மாமன்னராகும் தருணத்தில் நாட்டின் 7-வது பிரதமராக இருப்பதையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அன்று, தனது தந்தைக்கும் பிரதமர் மகாதீருக்கும் இடையில் இருந்த நெருக்கமும் உறவும் தனது ஆட்சியிலும் நாட்டின் வளப்பத்தை முன்னிட்டு அவரோடு தொடர்ந்து இருக்கும் என நம்புவதாக மாமன்னர் மேலும் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மகாதீரின் அனுபவம் வாய்ந்த தலைமைத்துவத்தின் கீழ் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதற்குத் தடையாக இருக்கும் அம்சங்களை தகர்த்தெறிந்து முன்னோக்கிச் செல்லும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்த மாமன்னர் புருணை சுல்தானின் வருகைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.