Home நாடு “ஒற்றுமையையும், அமைதியையும் நாட்டில் மேம்படுத்துவோம்” மாமன்னர் அரியணை அமரும் விழாவில் மகாதீர் உரை

“ஒற்றுமையையும், அமைதியையும் நாட்டில் மேம்படுத்துவோம்” மாமன்னர் அரியணை அமரும் விழாவில் மகாதீர் உரை

751
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் மற்ற மாநில சுல்தான்களும், ஆளுநர்களும், புருணை சுல்தான் தம்பதியரும், சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரச வம்சத்தினரும், மலேசியத் தலைவர்களும் கலந்து கொண்ட மாமன்னரின் கண்கவர் அரியணை அமரும் விழாவில் உரையாற்றிய பிரதமர் துன் மகாதீர் முகமட் “அரசாங்கம் எப்போதும் நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்” என்று கூறினார்.

“பல்வேறு மதங்களையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட நாட்டில் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பும், சகிப்புத் தன்மையும்தான் நாட்டின் வெற்றிக்கு எல்லா காலத்திலும் உறுதுணையாக இருந்திருக்கிறது.  மக்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாவிட்டால் நமது நாடு தோல்வியடையும். ஒருசில சிறிய விரும்பத்தாகத சம்பவங்கள் நடந்திருப்பினும் பொதுவாக மக்களிடையே ஒற்றுமை நிலைத்தன்மையோடும், நல்லவிதமாகவும் இருந்து வந்திருக்கிறது” என்றும் மகாதீர் கூறினார்.

பகாங் ஆட்சியாளரான அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நாட்டின் 16-வது மாமன்னராக இன்று அதிகாரபூர்வமாக அரியணையில் அமர்ந்தார். அந்த வரலாற்றுபூர்வ நிகழ்ச்சியில் உரையாற்றிய மகாதீர் “நாட்டில் ஒற்றுமையை மேம்படுத்துவது என்பது அரசாங்கத்தின் தோள்களில் மட்டும் சுமத்தப்பட்டிருக்கும் சுமையன்று. மாறாக அது ஒரு கூட்டுப் பொறுப்பு” என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசாங்கம், நாட்டின் அரசியல் சாசனத்தை தொடர்ந்து மதித்து கடைப்பிடித்து வரும் என்றும் நாடு நிலைத்தன்மையோடு நடைபோட சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் மக்களாட்சி முறை எப்போதும் தழைத்தோங்கும் வண்ணம் அரசாங்கம் செயல்படும் என்றும் மகாதீர் தனதுரையில் தெரிவித்தார்.

நாட்டில் யாரும் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம், அரசாங்கம் நேர்மையோடு ஆட்சி செய்து வருவதோடு, ஊழலை ஒழிப்பதற்கும் பாடுபடும் என்றும் மகாதீர் உறுதியளித்தார்.

மக்களின் நலன்களைப் பாதித்த பிரச்சனைகளுக்கும், அனைத்துலக அரங்கில் நாட்டின் தோற்றத்தைக் களங்கப்படுத்திய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அரசாங்கம் தீவிரமாகச் செயல்படுவதாகவும் மகாதீர் கூறினார்.