Home நாடு 16-வது மாமன்னராக ஆட்சியில் அமரும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா, வரலாற்று நிகழ்வு!

16-வது மாமன்னராக ஆட்சியில் அமரும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா, வரலாற்று நிகழ்வு!

3355
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும் மற்றொரு வரலாற்று விழாவைக் காண மலேசியர்கள் அனைவரும் தயாராக உள்ளனர்.  மலேசியாவிற்கே தனித்துவமான இந்த விழாவில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) இஸ்தானா நெகாராவில் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்படவுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த விழாவிற்காக கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் அதற்கான பதாகைகளும் கொடிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா மேற்கொண்ட பார்வையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் மாமன்னர் அல்லது யாங் டி பெர்டுவான் அகோங் ஒன்பது மலாய் ஆட்சியாளர்கள் மத்தியிலிருந்து ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். பெர்லிஸ், கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களின் ஆட்சியாளர்கள் இந்த சுழற்றி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்களின் மாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா 16-வது ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரி 31-ஆம் தேதி ஆட்சியில் அமர்ந்தார்.

நாளை நடக்க இருக்கும் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்ச்சி என்னவென்றால், சுல்தான் அப்துல்லா மற்றும் இராஜா பெர்மைசூரி அகோங், துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியா இருவரும் முன்னாள் மாமன்னர்களின் பிள்ளைகள் ஆவர்.

இஸ்தானா நெகாராவின் நுழைவாயிலுக்குச் செல்லும் சாலைகளில், குறிப்பாக ஜாலான் துவாங்கு அப்துல் ஹாலீம், ஜாலான் செமாந்தான், ஜாலான் சங்காட் செமாந்தான் மற்றும் ஜாலான் ஸ்ரீ ஹர்த்தமாஸ் ஆகிய சாலைகளில் பதாகைகளில் மாமன்னர் மற்றும் மனைவியாரின் உருவப்படங்கள் கொண்ட பதாகைகள் இடம்பெற்றுள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை ஆர்டிஎம் மற்றும் பிற உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் இந்த வரலாற்று மிக்க விழாவை காலை 9 மணி முதல் நேரலையில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளன.