கோலாலம்பூர்: பிரதமரின் பதவிக்காலம் குறித்து எழுப்பப்படும் அதிகமான கருத்துகள் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்று பிகேஆர் கட்சி பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அம்மாதிரியான தலைவர்கள், அதற்கு பதிலாக அரசாங்க முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்திற்கு போதுமான நேரத்தையும் இடத்தையும் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த கருத்தினால் எடுக்கப்பட்ட முடிவு இப்பிரச்சனைக்கு தீர்வு காண போதுமானதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் தங்கள் ஆணையையும் பெரும்பான்மை ஆதரவையும் நம்பிக்கைக் கூட்டணிக்கு வழங்கியதைப் போலவே, அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் போதுமான நேரத்தையும் இடத்தையும் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் அடுத்தடுத்த திட்டம் குறித்து பல கட்சித் தலைவர்கள் பலமுறை கூறிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.