கோலாலம்பூர்: சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் மலாய் பாடப்புத்தகங்களில் ஜாவி எழுத்தழகியலை அறிமுகம் செய்வது குறித்து பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியோரை விமர்சித்துள்ளார்.
மலேசியாவில் பன்மைத்துவ சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்து கொள்ளாமல் டாக்டர் மகாதீர் ஜாவி எழுத்தழகியலை கட்டாயப்படுத்த விரும்புகிறார் என்பதை ஏற்பதற்கு கடினமாக இருக்கிறது என்று இராமசாமி கூறினார்.
“மலேசியாவை ஒரு வளர்ந்த தேசமாக உருவாக்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள பிரதமருக்கு, இது போன்ற விவகாரங்கள் மலேசியாவில் வாழும் பல்வேறு இன மக்கள் மத்தியில் எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளவில்லை” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“கல்வி அமைச்சர்களைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் மெட்ரிகுலேஷன் நுழைவுக்கு தீங்கு விளைவித்தது மட்டுமல்லாமல், மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மலாய்க்காரர்களுக்கு தனியார் துறையில் அதே வாய்ப்பை வழங்கவில்லை என்று விமர்சித்தவர். அவர் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டேன்” என்று இராமசாமி கூறினார்.
“ஜாவி எழுத்தழகியல் இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் சொல்வது ஏற்புடையதல்ல. எந்தவொரு முறையான பேச்சுவார்த்தைகளும் இல்லாமல் ஜாவி எழுத்தழகியலை செயல்படுத்த அரசாங்கம் ஏன் ஆர்வமாக உள்ளது,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.