நீலாய்: கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி சிரம்பானின் பாந்தாயில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து கற்றல் குறைபாடுகள் உடைய 15 வயது அயர்லாந்து சிறுமியைக் தேடும் நடவடிக்கை பத்தாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை தொடர்கிறது.
நோரா அன் முதல் நாள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த சிறுமியின் இருப்பு மற்றும் நிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்களிடத்திலும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
இதற்கிடையில், பத்திரிக்கையாளர்கள் இந்த நடவடிக்கையின் போது தொடர்ந்து பின்தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று நீலாய் மாவட்டகாவல் துறைத் துணைத் தலைவர் முகமட் நோ மர்ஸுகி பெசார் தெரிவித்தார்.
அயர்லாந்து சிறுமியை தேடும் நடவடிக்கைக்காக தற்போது, 353 தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், மாலை 5 மணி வரையிலும் அவர்களின் தேடுதல் நடவடிக்கைத் தொடரும் என்று கூறப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை, நோராவைக் கண்டு பிடித்து தகவல் தருபவர்களுக்கு 50,000 ரிங்கிட் அன்பளிப்பாக வழங்க உள்ளதாக அவரது தாயார் குறிப்பிட்டிருந்தார்.