புது டில்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக அவர் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார். ஆயினும், இம்முறை அம்மாநிலத்தில் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதால், அவர் அங்கு போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இச்சூழலில் மன்மோகன் சிங்கை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இம்முறை அவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அங்குள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் களத்தில் இறங்குகிறார். இதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூர் சென்று மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.