புது டில்லி: ஜம்மு–காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதுடன், காஷ்மீர் மறுசீரமைக்கப்பட்டு இரண்டு யூனியன் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
இந்த விவகாரங்களால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் கடந்த இரண்டு வாரமாக அங்கு ஊரடங்குத் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஸ்ரீநகரில் உள்ள ஒரு சில ஆரம்ப பள்ளிகளும், அனைத்து அரசு அலுவலங்களும் இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டி இந்து தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜம்மு–காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, இன்று முதல் 196 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.