கூச்சிங்: சரவாக்க்கில் நடந்த ஒரு விழாவில் தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்ட போது, நிற்க மறுத்த நபர்களின் காணொளி தொடர்பாக, ஒரு பெண் உட்பட ஒன்பது நபர்களிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் கூறுகையில், 34 மற்றும் 64 வயதுடைய அச்சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் சரவாக் குற்றவியல் புலனாய்வுத் துறையால் செய்யப்பட்டதாகக் கூறினார்.
“இந்த வழக்கின் விசாரணை 1968-ஆம் ஆண்டு தேசிய கீதம் சட்டம் பிரிவு கீழ் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று அவர் புக்கிட் அமானில் இன்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய கீதத்தை ஏன் மதிக்கவில்லை என்று கேட்டதற்கு, அவர்கள் எதிர்ப்பின் அடையாளமாக அவ்வாறு செயல்பட்டதாக மியோர் கூறினார்.
“காவல் துறையின் விசாரணையில் எந்தவொரு காரணத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால் நமது நாட்டு தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்டால், மலேசியர்கள் மரியாதை செலுத்தி எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் நிறுவப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.