கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள இலவச காலை உணவு திட்டம் (பிஎஸ்பி), நாடு முழுவதும் சுமார் 2.7 மில்லியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் இன்று புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் வெற்றிக்கு இரண்டு வழிமுறைகளை கல்வி அமைச்சு பின்பற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
“முதல் வழிமுறை பிஎஸ்பியின் 30 நிமிட செயல்பாடாகும். இது சுவையான உணவு மற்றும் பழ வகை உணவுப்பட்டியலை பிரதான கலவையாகப் பயன்படுத்துகிறது.”
“இரண்டாவது வழிமுறை, பால் தயாரிப்பு அல்லது சத்தான பானங்கள் மற்றும் துரித உணவுகளான ரொட்டி, தானிய சிற்றுண்டி, இனிப்ப அப்பங்கள் (கேக்) மற்றும் வேகவைத்த முட்டை போன்றவற்றை உள்ளடக்கிய 10 நிமிட செயல்பாடாகும்” என்று அவர் கூறினார்.
மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் (ஐபிடிஏ) நிபுணத்துவத்துடன் இணைந்து பிஎஸ்பி உணவுப்பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று மஸ்லீ கூறினார்.
காலை அமர்வு மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கு முன்னும், பிற்பகல் அமர்வு மாணவர்களுக்கு மாலை 4.00 மணிக்கு முன்பும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும், பள்ளியின் பொருத்தத்திற்கு ஏற்ப கட்டம் கட்டமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
200 பள்ளி நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இந்த திட்டத்திற்கு 800 மில்லியனிலிருந்து 1.67 பில்லியன் ரிங்கிட் வரையிலும் செலவாகும் என்று மாஸ்லீ கூறினார்.