கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளைத் தூண்டும் ஏராளமான நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தியது.
இருப்பினும், அப்பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை புக்கிட் அமான் பயங்கரவாதப் பிரிவுன் உதவி இயக்குநர் அயோப் கான் மைடின் பிச்சை வெளியிடவில்லை.
விடுதலைப் புலிகள் தொடர்பான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், ஆட்சேர்ப்பு செய்வதற்கும், செயல்படுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசியாவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை காவல்துறை இதுவரை கைது செய்துள்ளதாக அயோப் கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களின் படங்கள், புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் குழுவுடன் தொடர்புடைய பிற பொருட்களையும் காவல் துறை பறிமுதல் செய்தனர்.
1990-களில் இருந்து இலங்கையில் தமிழ் போராட்டம் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், ஏன் தற்போது காவல் துறை நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள் என்று கேட்கப்பட்டதற்கு, அவர்கள் நாட்டில் ஒரு புதிய அலையை ஏற்படுத்த இருப்பதாக அயோப் கூறினார்.
“கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்தது.
அவர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.