Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை மாற்ற தவிப்பவர் யார்?”- பி.இராமசாமி

“நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை மாற்ற தவிப்பவர் யார்?”- பி.இராமசாமி

1050
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்பதைத் தடுக்க தற்போது, யார் பின் புறமாக செயல்பட்டு வருகிறார்கள் என்ற கேள்வியினை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி முன்வைத்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மகாதீர் முகமட் இந்த தவணை முடியும் வரையிலும் பிரதமர் பதவியில் நிலைத்திருக்கட்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியிருந்ததற்கு அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“மகாதீருக்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டுமென்றால், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் மகாதீர் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்திற்கு என்னவாயிற்று என்பதை பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி விளக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அன்வாருடனான அஸ்மினின் முரணான கருத்துகள், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கைக் கூட்டணியில் இருந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க வழிநடத்தியுள்ளது என்று இராமசாமி குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தின்படி பதவி ஏற்க இருக்கும் அன்வார் பின் புறமாக அரசாங்கத்தை அமைக்க உள்ளார் என்றால், ஆரம்பத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை தற்போது நிராகரித்து கருத்துகள் தெரிவிக்கும் அஸ்மினின் நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும் என்று அவர் வினவினார்.

“மகாதீருக்குப் பதிலாக அன்வார் சரியான வேட்பாளர் அல்ல என்று அஸ்மின் கருதினால், அதனை பகிரங்கமாக வெளிப்படுத்த அஸ்மினுக்கு தைரியமும் நேர்மையும் இருக்க வேண்டும். வெளிவந்துக் கொண்டிருக்கும் வதந்திகள் உண்மையாக இருந்தால், அமானா மற்றும் ஜசெக கட்சிகளை ஈடுபடுத்தாத ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது குறித்து அஸ்மின் அல்லது அம்னோ யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அஸ்மின் தனிப்பட்ட முறையில் அம்னோவுடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க நோக்கம் கொண்டுள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு வேளை இது உண்மையாக இருந்தால், இதைவிட ஒரு மோசமான, கொடூரமான நம்பிக்கைக் துரோகம் இருக்க முடியாது என்று இராமசாமி தமது முகநூல் பக்கத்தில் இன்று புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

“அஸ்மினுக்கு அன்வாருடன் கடந்த காலங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம், ஆனால் அஸ்மின், அன்வாருக்குப் பிறகு பிகேஆரின் இரண்டாவது தலைவராக இருக்கிறார். தேசிய முன்னணி ஆட்சியை எதிர்த்துப் போராட பல ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட போராட்டத்தை அறியாமல் அஸ்மின் அன்வாரிடமிருந்து விலகி இருக்க எந்த காரணமும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

“மகாதீர் இடைக்கால பிரதமராக மட்டுமே செயல்படுவார் என்ற உண்மையை அஸ்மின் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த பொதுத் தேர்தலின் போது அன்வார் சிறையில் இல்லாதிருந்தால், அவதே இந்நேரம் பிரதமராக இருந்திருப்பார், மகாதீர் அல்ல. அன்வார்  பிரதமர் பதவிக்கு வருவதை எதிர்க்கவோ அல்லது நாசப்படுத்தவோ அஸ்மின் இயங்கக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.