கோலாலம்பூர்: இந்த வார இறுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் அவர்களை காவலில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கையானது, நடந்துகொண்டிருக்கும் காவல் துறையின் விசாரணைகளின் முடிவுகளையும், அத்துடன் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலக முடிவைப் பொறுத்தது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“புலனாய்வாளர்கள் விசாரணை ஆவணங்களை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க விசாரணைகளை விரைவுபடுத்துகின்றனர். எனவே அந்த செயல்முறைக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. தீபாவளி பண்டிகை வேகமாக நெருங்கி வருவது குறித்து அனுதாபப்பட்டாலும், எங்கள் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன” என்று அப்துல் ஹாமிட் கூறினார்.
“எனவே விசாரணை ஆவணங்களை முடிக்கும் வரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோலாலம்பூரில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை கண்காட்சி விருந்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவைச் சேர்ந்த இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு நபர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேலும் ஐந்து சந்தேக நபர்கள் மலாக்காவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.