Home One Line P2 துருக்கி, மலேசியா மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்க இந்தியா பரிசீலனை

துருக்கி, மலேசியா மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்க இந்தியா பரிசீலனை

1069
0
SHARE
Ad

புதுடில்லி – காஷ்மீர் மீதான இந்தியாவின் உரிமை, மற்றும் இறையாண்மை குறித்து எதிர்மறையானக் கருத்துகள் தெரிவித்திருக்கும் துருக்கி, மற்றும் மலேசியத் தலைவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, அந்நாடுகளின் இறக்குமதிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பரிசீலனை செய்து வருகிறார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் இறக்குமதி வரிகள் விதிப்பது, இறக்குமதிகளின் அளவுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது, இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கடுமையான தரநிர்ணய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது ஆகியவையும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் இருக்கும் தேர்வுகளாக அமையலாம்.

இந்தியாவின் மொத்த அயல் நாட்டு வணிகத்தில் இந்த இருநாடுகளின் பங்கு 2.9 விழுக்காடு மட்டும்தான் என்றாலும், துருக்கியுடனான வணிகம் இந்தியாவுக்கு சாதகமான அளவில் கூடுதலாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால், மலேசியாவைப் பொறுத்தவரை, ஏராளமான செம்பனை எண்ணெய் ஏற்றுமதியால் இருநாடுகளுக்கும் இடையிலான வணிகம் மலேசியாவுக்கு கூடுதலாக சாதகமாக இருக்கிறது.

இதற்கிடையில், மலேசிய செம்பனை எண்ணெயை வாங்காதீர்கள் என இந்திய வணிக அமைப்புகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து செம்பனை எண்ணெய் விலைகள் சந்தைகளில் சரிவு கண்டன.

மலேசிய செம்பனை எண்ணெய்க்கு கடந்த மாதம் இந்திய அரசாங்கம் 5 விழுக்காடு கூடுதலான சுங்க வரியை விதித்தது. அடுத்த ஆறுமாதங்களுக்கு நடப்பில் இருக்கும் இந்த சுங்க வரி மேலும் கூடுதலாக அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அரசாங்கத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மகாதீரும் காஷ்மீர் குறித்த தனது கருத்துகளை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.