கோலாலம்பூர்: சிறார் பாலியல் குற்றவாளிகளிடமிருந்து சாட்சியின் வாக்குமூலங்களைப் பெறுவதில் உள்ள பலவீனங்கள் குறித்து பிரதமர் துறை அமைச்சர் லீ வுய் கியோங் அளித்த விளக்கமுறை ஏற்கக்கூடியதாக இருந்ததாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹன்னா இயோ பாராட்டினார்.
எதையும் மறைக்க முயற்சிக்காத அவரின் நிலைப்பாடு, வரம்புகளை அடையாளம் காண்பதற்கு ஒரு சாதகமான வளர்ச்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் பேசிய லீ, வசதிகளின் பற்றாக்குறை, தவறான உபகரணங்கள் மற்றும் அதிகாரிகளிடையே பயிற்சியின்மை ஆகியவை பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து சாட்சி வாக்குமூலங்களைப் பெறுவதற்கு தடைகளாக உள்ளதாக அவர் கூறினார்.
பலவீனங்களை சரிசெய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த தனது அமைச்சு லீவுடன் இணைந்து செயல்படும் என்று இயோ கூறினார்.
“நாம் முன்னேற வேண்டும். நம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க அனைவரும், அரசு, நீதித்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் நிதி பற்றாக்குறையினால் தப்பித்து விடக்கூடாது”
“காற்பந்து, ஆடம்பர தங்கும் விடுதி நிகழ்ச்சிகள் மற்றும் அமைச்சர்களுக்கான பயணக் கொடுப்பனவுகளுக்கு நம்மிடம் போதுமான பணம் இருக்குமானால், நிச்சயமாக குழந்தைகளுக்கும் போதுமான (நிதி) வைத்திருக்க வேண்டும்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இதற்கிடையில், குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வளங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
குழந்தைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்காக குழந்தைகளின் பாதுகாப்பின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அமைச்சு முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரிப்பதை உறுதி செய்வதற்காக புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வு பிரிவில் (டி 11) உள்ள பணியாளர்கள் மற்றும் வளங்களின் எண்ணிக்கையை உள்துறை அமைச்சு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளின் பெயர்களைக் கொண்ட ஒரு விரிவான குழந்தை பதிவு முறை உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2017-ஆம் ஆண்டு முதல், சிறார் பாலியல் குற்றங்களில் 3,738 புதிய வழக்குகள் உள்ளதாகவும், இதில் 2019-இல் 978 வழக்குகளும், 1,131 வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.