Home One Line P1 சமூகப் பக்கப் பதிவு குறித்து ஹன்னா இயோ புக்கிட் அமானில் வாக்குமூலம்

சமூகப் பக்கப் பதிவு குறித்து ஹன்னா இயோ புக்கிட் அமானில் வாக்குமூலம்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவிடம் இருந்து காவல் துறையினர் இன்று காலை வாக்குமூலம் பெற்றனர்.

இயோ தமது வழக்கறிஞர்களான கோபிந்த் சிங் தியோ மற்றும் சியாஹ்ரெட்ஸான் ஜோஹானுடன் புக்கிட் அமானுக்கு வந்தார்.

#TamilSchoolmychoice

காவல் துறை விசாரணைக்கு உதவுவதற்காக இயோ தனது கைபேசி மற்றும் சமூக ஊடக கணக்கு கடவுச்சொல்லை ஒப்படைத்ததாக நிருபர்களை தொடர்பு கொண்டபோது கோபிந்த் சிங் கூறினார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட், முன்னாள் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர், புக்கிட் அமானில் இன்று காலை சமூக ஊடக பதிவு குறித்து வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகள் தேசத்துரோக சட்டத்தின் பிரிவு 4 (1), மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (சி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் நடத்தப்படுகின்றன.

ஜூன் 11 அன்று, முகநூலில் ‘ஹன்னா இயோ’ கணக்கு மூலம் வெளியிடப்பட்ட பதிவுகள் தொடர்பாக காவல் துறை விசாரணை அறிக்கையை வெளியிட்டனர்.

முன்னதாக, ஹன்னா இயோ, மார்ச் மாதம் குழந்தை திருமணம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பாக புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“எனது டுவிட்டர் பதிவு தொடர்பாக வாக்குமூலம் வழங்க புக்கிட் அமான் என்னை அழைத்தது.

“இப்போது, ​​என்னால் ஒரு கேள்வியைக் கூட கேட்க முடியாது.” என்று அவர் டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து குழந்தை திருமணத்தை எதிர்ப்பதற்கான தேசிய வரைவு திட்டம் குறித்து இயோ கவலை தெரிவித்திருந்தார்.

மார்ச் 9-ஆம் தேதி தனது டுவிட்டரில், தமக்கு பதிலாக பாஸ் கட்சியின் சித்தி ஜைலா முகமட் யூசோப் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த திட்டம் குறித்து என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

குழந்தை திருமணத்திற்கான காரணங்களைக் கையாள்வதற்கான தேசிய மூலோபாயத் திட்டம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, இது தொடர்பான மாநில அளவிலான சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கூட்டாட்சி கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்கிறது.

குழந்தைத் திருமணத்திற்கான காரணம் வறுமை மற்றும் கல்விக்கான அணுகல் இல்லாமை என அடையாளம் காணப்பட்ட ஆறு காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.