இஸ்லாமாபாட்: கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உருவாகின.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வரைப்படத்தை மாற்றி அமைக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு அங்கீகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரைபடம் தவறானது என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும், ஐநா பாதுகாப்பு ஆணையத்தின் தீர்மானங்களை மீறியது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1947-இல் ஏற்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கத்துவா, ஜம்மு, உதம்பூர், ரியாஸி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபராபாத், லே, டலாக், கில்ஜித், கில்ஜித் வசாரத், சில்லாஸ் மற்றும் மலைப்பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.