கோலாலம்பூர்: இந்தியர்களுக்கு நேரடியாக அரசாங்கம் வழங்கிய நிதியைப் பெற்றதாக, தேசிய முன்னணி நிருவாகத்தின் ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் இரண்டு முன்னாள் துணை அமைச்சர்கள் மீது குற்றம் எழுந்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
இருப்பினும், இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு (செடிக்) மூலமாக நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அந்நபர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.
இந்நிதியானது தனது இலக்கு குழுவை எட்டவில்லை என்பது தெளிவாவதால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இந்த விஷயத்தை விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிருவாகத்தின் போது திரட்டப்பட்ட நிதி அதன் இலக்கு குழுவை எட்டவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. மஇகாவுக்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்பதுதான் தற்போதைக்கு நமக்கு தெரிந்த விவரம்”
“இருப்பினும், ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் இரண்டு முன்னாள் துணை அமைச்சர்களுக்கு அந்நிதிகள் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதியை வழங்குவதில் இது தவறான முறையாகும்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.