கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி பொதுப் பேரவையை பாரம்பரியமாக தொடக்கி வைக்க இம்முறை அக்கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி அழைக்கப்படவில்லை.
வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் அக்கூட்டத்தை தொடக்கி வைக்க இம்முறை பிகேஆர் ஆலோசகரும் துணைப் பிரதமருமான வான் அசிசா அழைக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை இளைஞர் அணியின் தலைவர் அக்மால் நாசீர் உறுதிப்படுத்தினார்.
“அனைத்து பிகேஆர் உறுப்பினர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்குவதற்கு இளைஞர் அணி பொறுப்பேற்றுள்ளது. கட்சியின் தலைமைக்கு ஆதரவளிப்பதில் இளைஞர் அணி தொடர்ந்து உறுதியாக நிற்கும். இதனால் பிகேஆர் போராட்டத்தின் பாரம்பரியத்தை பேணுகிறது” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த முடிவிற்கு மத்திய தலைமைகளிலிருந்து 25 பேரில் 21 பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இளைஞர் அணி துணைத் தலைவர் ஹில்மான் இட்ஹாம் உட்பட இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர்.
இந்த முடிவுக்கு எதிராக ஹில்மான் மற்றும் 20 பிற இளைஞர் தலைவர்கள் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
“அழைப்பை இரத்து செய்வதற்கான அணுகுமுறையும் நடவடிக்கையும் காங்கிரஸின் நோக்கம் மற்றும் அமைப்பின் மரபுகளுக்கு எதிரானதாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
பிகேஆரை அதன் பாதையில் மீட்டெடுப்பதற்கும், அதன் உறுப்பினர்களின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும், அமைப்பின் மரபுகளையும் நிலைநிறுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அக்குழு தலைமைக்கு அழைப்பு விடுத்துள்ளது.