கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் தேசிய இளைஞர் காங்கிரஸைத் திறந்து வைப்பதற்கான அழைப்பை மீட்டுக் கொண்டதற்கான முடிவிற்குப் பின்னால் தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி உள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார்.
அதன்படி, இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கையை எடுக்க அவர் இளைஞர் அணியிடம் விட்டுவிடுவதாக தெரிவித்தார்.
“எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் கலந்துகொள்வேன் என்று பதிலளித்தேன். ஆனால் சமீபத்தில் இரத்து செய்யப்பட்டது. இளைஞர் அணியின் தலைவருக்குப் பின்னால் தனி நபரின் சூழ்ச்சி இல்லாமல் எதுவும் செய்யத் துணிய மாட்டார் என்று நான் நம்புகிறேன்.”
“இது என்னைப் பற்றியது அல்ல, ஆனால், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி காரணமாக நடந்துள்ளது” என்று நேற்று வியாழக்கிழமை அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கட்சியின் காங்கிரஸ் பிரிவில் அவர் பேசுவதைத் தடுக்க இது நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி மலாக்காவில் நடைபெறும் பிகேஆர் இளைஞர் அணியின் தேசிய காங்கிரஸை பிகேஆர் ஆலோசகர் டாக்டர் வான் அசிசா அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என்று புதன்கிழமை இளைஞர் அணித்தலைவர்அக்மால்நஸ்ருல்லாமுகமட்நாசீர்தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், அந்த சூழ்ச்சி நபர் உண்மையில் கட்சியின் சொந்த துணைத் தலைவர் அஸ்மின் அலிதான் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் அக்மால் நாசீர் கூறியுள்ளார்.
பிகேஆர் இளைஞர் காங்கிரஸைத் திறந்து வைப்பதற்கான அழைப்பு தொடர்பான பிரச்சனை ஊடகங்களின் எல்லைக்குள் வைத்திருப்பதன் மூலம் முடிந்தவரை சிறப்பாக கையாளப்பட வேண்டும் என்றார். இருப்பினும், அஸ்மின் கட்சியையும் அவர்களின் போராட்டத்தையும் மதிக்கவில்லை என்று அவர் கூறினார்.