கோலாலம்பூர்: நேஷனல் பீட்லாட் கார்ப்பரேஷன் (என்எப்சி) தொடர்பான இரகசிய வங்கி விவரங்களை அம்பலப்படுத்தியதற்காக ரபிசி ராம்லியின் தண்டனையை ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரத்து செய்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், முன்னாள் பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினரான ரபிசி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு அமர்வு நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை விதித்தது.
என்எப்கார்ப், நேஷனல் மீட் அண்ட் லைவ்ஸ்டாக் செண்டெரியான் பெர்ஹாட், அக்ரோ சயின்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செண்டெரியான் பெர்ஹாட் மற்றும் என்எப் கார்ப் நிர்வாகத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சலே இஸ்மாயில் ஆகியோர் தொடர்பான நான்கு வாடிக்கையாளர் சுயவிவர ஆவணங்களை அணுகியதாக ரபிசி மீது குற்றம் சாட்டப்பட்டது.
2012-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதியன்று ஜாலான் டிராபிகானா செலாதான் 1, வணிக சதுக்கத்தில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் ஊடக ஆலோசகர் மற்றும் பத்திரிகையாளருக்கு இந்த ஆவணங்களை அம்பலப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் மீது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டம் 1989 (பாபியா) பிரிவு 97 (1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.