கோலாலம்பூர்: அமைச்சரவையை மறுவடிவமைப்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் அது எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
உண்மையிலேயே தகுதியான வேட்பாளர்களை அமைச்சரவையில் உறுதிப்படுத்த சிறிது நேரம் எடுக்கும் என்று அவர் கூறினார். மேலும், நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள ஐந்து கூட்டணிக் கட்சிகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மறுசீரமைப்பு என்பது எந்த வகையிலும் அரசாங்கத்தின் நிலையை மீட்டெடுக்கக்கூடிய ஒரு செயலல்ல, இப்போது நாம் புதியவரை நியமித்தாலும், அவர்கள் நேரம் எடுத்துக் கொள்வதைக் காணலாம். எனவே இதன் விளைவு நீண்ட காலத்திற்கு காணப்படாது.”
“ஒருவேளை அந்த நேரத்தில் மீண்டும் அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை இருக்கலாம்.”
“எனவே, மறுசீரமைப்பு குறித்து முழுமையான மறுஆய்வு செய்யப்பட வேண்டும். புதியவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட வேண்டும்” என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மறுசீரமைப்பு நடைபெறுவதற்கு முன்னர், குறிப்பாக அடுத்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) தலைவர்கள் உச்சமாநாட்டை நடத்துவதற்காக அதிக பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளதாக டாக்டர் மகாதீர் கூறினார்.