கோலாலம்பூர்: பறக்கும் வாகன திட்டத்துடன் இணைக்கப்பட்ட தனியார் நிறுவனமான ஏரோடைன் வென்ச்சர்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள பொது நிதியான 20 மில்லியன் ரிங்கிட்டை தணிக்கை செய்யுமாறு தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) அமலாக்கத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
பறக்கும் வாகனத் திட்டம் குறித்த தங்கள் அறிக்கையில் பிஏசி குறிப்பிட்டுள்ள ஆறு பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.
பிரதமர் துறையின் கீழ் உள்ள மலேசியன் இண்டஸ்ட்ரி- கவர்மெண்ட் குரூப் பார் ஹைடெக்னொலொஜியின் (எம்ஐஜிஎச்டி) துணை நிறுவனமான வென்ச்சர்டெக் செண்டெரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் மூலம் 20 மில்லியன் ரிங்கிட் ஏரோடைனுக்கு அனுப்பப்பட்டது.
“பறக்கும் வாகனத் திட்டம் ஒரு தனியார் முயற்சி என்றும், அரசாங்க நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் கூறினாலும், வென்ச்சர்டெக் மூலம் – ஏரோடைனின் 20 மில்லியன் ரிங்கிட் முதலீட்டை எம்ஐஜிஎச்டி அங்கீகரித்துள்ளது” என்று பிஏசி கண்டறிந்துள்ளது.
“கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வென்ச்சர்டெக்கிலிருந்து ஏரோடைனுக்கு பணம் மாற்றப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச பறக்கும் வாகனத் திட்டத்தில் பொது மக்களின் பணம் எதுவும் ஈடுபடவில்லை என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் முகமட் ரெட்சுவான் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.