புது டில்லி: இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே எதிர்ப்பு அலைகள் எழுந்து ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் டில்லியில் இன்று வெள்ளிக்கிழ்மை அச்சட்டத்தை எதிர்த்து ஜாமா மசூதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது.
அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதத்தின் அடிப்படையில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்தம் வகை செய்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசத்திலிருந்து மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமையை வழங்கும்.
இந்த சட்டம் முஸ்லிம்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விரோதமானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.