Home One Line P1 “இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெறவேண்டும்” – வேதமூர்த்தி

“இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெறவேண்டும்” – வேதமூர்த்தி

843
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “மலேசிய இந்திய இளைஞர்கள் தங்களின் பாரம்பரிய பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் எண்ணிப் பார்த்து தங்களை விவேக சிந்தனையுடன் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தை எடைபோட்டு எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத் தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மையையும் உழைப்பையும் உறுதியாகக் கொண்ட இளைஞர்கள் நூறு பேரை என்னிடம் கொடுத்தால், இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்றுரைத்த விவேகியும் இந்து சமயத்தின் உலக அடையாளமுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் நாளில் நம் இளைஞர்கள் புத்தெழுச்சி பெற வேண்டும்” என்று மலேசிய முன்னேற்றக் கட்சியின் (எம்.ஏ.பி.) தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்தியாவைப் பற்றி ஏளனமாகவும் இந்து சமயத்தைப் பற்றி இளப்பமாகவும் எண்ணிக் கொண்டிருந்த மேலைநாட்டவரின் அலட்சிய மனப்பான்மையை அவர்கள் அமைத்துத் தந்த மேடையிலேயே முழங்கி வீழ்த்தினார் சுவாமி விவேகானந்தர். இது, சிங்கத்தின் குகைக்குள்ளே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போன்ற துணிவுக்கு நிகரானது” என்றும் பிரதமர் துறை அமைச்சருமான வேதமூர்த்தி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை (ஜனவரி 12) முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“நம்மிடம் என்ன இல்லை? உலகின் மூத்த மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம்; அதைப்போல பண்பாடும் நன்னெறியும் மிக்க சமயத்தைப் பெற்றிருப்பவர்கள் நாம்; கடல் கடந்த வாணிபத்திற்கும் நிதி நிருவாகத்திற்கும் பெயர் பெற்றவர்கள் நாம்; நிலத்திலும் நீரிலும் படை நடத்தி உலகையே ஒரு கட்டத்தில் ஆண்டவர்கள் நாம்; தருமத்திலும் கொடை வழங்குவதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் நம் முன்னோர். எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்புக்கு அஞ்சாதவர்கள் நாம். இவ்வளவு வரலாற்றுப் பெருமை இருந்தும் நம்முடைய குடும்பங்களிலேயே கொள்ளை அடிக்க குழு அமைத்து செயல்படுவது சரியா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“அதேவேளை பக்கிங்காம் அரண்மனையில் பாராட்டு பெறுவது முதல் விளையாட்டில் தங்கப் பதக்கங்களை உலக அளவில் குவிப்பதுவரை பல்துறைகளிலும் சிறந்து விளங்கி மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துவரும் இளைய சமுதாயத்தினரை எண்ணிப் பெருமை கொள்கிறேன். நாளைய உலகம் தொழில்நுட்பத்தையும் வர்த்தகத்தையும் அடிப்படையாக கொண்டிருக்கப் போகிறது. எனவே, நம் இளைஞர்கள் விவேகம், தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட சிந்தனைக்கு முன்னுரிமை அளித்து நான்காவது தொழில்புரட்சி, பன்னிரண்டாவது மலேசியத் திட்டம், 2030 கூட்டு வளப்பத் திட்டம் ஆகியவற்றை எதிர்கொள்ள விவேகானந்தர் பிறந்த நாளில் உறுதி கொள்ள வேண்டும்” என்று வேதமூர்த்தி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.