Home One Line P2 ஆயிரம் பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் ஊழியர் சேமநிதி வாரியம்

ஆயிரம் பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் ஊழியர் சேமநிதி வாரியம்

1008
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 7.1 மில்லியன் உறுப்பினர்களைக்கொண்டுள்ள ஊழியர் சேமநிதி வாரியம் நாட்டின் மிகப் பெரிய சேமிப்பு மற்றும் முதலீட்டு அமைப்பாக உருவெடுத்துள்ளது. அடுத்து வரும் 18 மாதங்களில் ஊழியர் சேமநிதி வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு 1 டிரில்லியன் ரிங்கிட்டை – அதாவது 1,000 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 விழுக்காட்டு மதிப்புக்கு ஈடானதாகும். மலேசிய பங்கு சந்தையின் சந்தை விலையில் 70 விழுக்காட்டு மதிப்பை இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் சொத்துகள் கொண்டிருக்கின்றன.

இன்னொரு கோணத்தில் நாட்டின் மற்றொரு பெரிய முதலீட்டு நிறுவனமான பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் சொத்துகளை விட மூன்று மடங்கு அதிகமான சொத்துகளை ஊழியர் சேமநிதி வாரியம் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

வங்கி சேமிப்புக்காக வழங்கப்படும் வட்டியைவிட ஊழியர் சேமநிதி வாரியம் வழங்கும் வட்டி விகிதங்கள் அதிகமாகவும், ஒரே சீராகவும் இருப்பதால் ஓய்வு பெற்றவர்களும் கூட தொடர்ந்து தங்களின் சேமிப்பை ஊழியர் சேமநிதி வாரியத்திலேயே வைத்திருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் ஊழியர் சேமநிதி வாரியம் வழங்கி வரும் வட்டி விகிதம் 5.65 விழுக்காட்டுக்குக் குறையாமல் இருந்து வருகிறது.

பாதுகாப்பான சேமிப்பு, நிலையான வட்டியை வழங்கி வர வேண்டிய அவசியம் ஆகிய காரணங்களால் ஊழியர் சேமநிதி வாரியம் இதுவரையில் 40 வெளிநாடுகளில் தனது முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது. 2004 முதல் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் கொள்கையை ஊழியர் சேமநிதி வாரியம் கடைப்பிடித்து வருகிறது.

எந்த வெளிநாடுகளில் முதலீடு செய்வது என்பதை கவனத்துடன் ஊழியர் சேமநிதி வாரியம் கையாண்டு வருகிறது. சமீப காலத்தில் மெக்சிகோ உள்ளிட்ட நான்கு தென் அமெரிக்க நாடுகளிலும் ஊழியர் சேமநிதி வாரியம் முதலீடு செய்திருக்கிறது.

எனினும் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்வதை ஊழியர் சேமநிதி வாரியம் தவிர்த்தே வந்திருக்கிறது.

இன்றைய மதிப்பில் சுமார் 886.50 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை ஊழியர் சேமநிதி வாரியம் வெளிநாடுகளில் கொண்டிருக்கிறது.