கோலாலம்பூர்: மின்–பணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 18.8 மில்லியன் ரிங்கிட்டை மக்கள் செலவளித்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி, மொத்தம் 784,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 672,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். இது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் பரிசு” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்
தனிப்பட்ட தரவுகளின் ஊடுருவல் குறித்த பொது மக்களின் கவலைகள் குறித்து கேட்கப்பட்டபோது, இது நடக்காது, ஏனெனில் பெறப்பட்ட தரவுகள் பங்குதாரர்களுக்கு வெளியிடப்படாது என்று அவர் கூறினார்.
“இந்த மின்–பணப்பை (இ–வாலட்) திட்டம் மீது பொறாமைப்படக் கூடிய சில தரப்பினரால், இம்மாதிரியான விவகாரங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இந்த முயற்சியைத் தடுக்க முயற்சிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) தொடங்கி மார்ச் 14 வரை மூன்று இ–வாலட் நிறுவனங்களான பூஸ்ட் (Boost), கிராப் பே (GrabPay) மற்றும் டச் என் கோ இவாலட் (Touch ‘n Go eWallet) ஆகியவற்றிலிருந்து 15 மில்லியன் மலேசியர்களுக்கு 30 ரிங்கிட் பணத்தை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. மானியங்களுக்கு உரிமை உண்டு.