கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) முதல் ஜனவரி 31 வரை சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து நதி மாசு சம்பவங்களைத் தடுப்பதற்காக மாநிலத்தில் உள்ள நதிப் படுகைகளை கண்காணிக்க சிலாங்கூர் மாநில அரசு ‘நீர்வளத் திட்டங்களை‘ மேற்கொள்ளும் என்று சுற்றுச்சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் மாநில பயனீட்டாளர் விவகாரங்களுக்கானத் தலைவர் ஹீ லோய் சியான் கூறினார்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் 200 அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஈடுபடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த கண்காணிப்பு நடவடிக்கை சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட்டின் படுகைகளில் நடத்தப்படும். ஒவ்வொரு நதியும், அப்பகுதியில் வசிக்கும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இருப்போருக்கு 60 விழுக்காடு (சிலாங்கூர் நதி) மற்றும் 30 விழுக்காடு (சுங்கை லங்காட்) நீர் வழங்கலை ஏற்படுத்துகிறது”
24 மணி நேரமும் இந்த கண்காணிப்பு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
பண்டிகை காலங்களில் பொறுப்பற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நதி மாசுபாடு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன என்று ஹீ கூறினார்.
“பண்டிகை காலங்களில் கழிவுகளை ஆற்றில் கொட்டுகிறார்கள். அதனால்தான் இந்த நடவடிக்கையை நடத்துவதற்கான அணுகுமுறையை நாங்கள் எடுத்தோம். நதி மாசு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இது இறுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுத்தப்படுவதற்கு வழிவகுத்தது மற்றும் பயனர்கள் நீர் விநியோகத்தை இழக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.