கோத்தா பாரு: கிளந்தான் மாநிலத்தின் ஜசெக தலைவராக நியமித்ததை அடுத்து, முன்னாள் பிதரமர் துறை அமைச்சர் சைட் இப்ராகிம், தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அணுகத் தொடங்கியுள்ளார்.
நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை, பச்சோக்கிலுள்ள கம்போங் சாப்பில் மக்களுடன் சந்திப்பு நடத்திய அவர், நாட்டின் அரசியல் நிலைமை குறித்து பொதுவான விளக்கம் அளித்தார்.
சுமார் 100 உள்ளூர் மக்களுடன் சேர்ந்து, மலேசியாவின் அரசியல் நிலைமையைப் புரிந்துகொள்ளவும், வெறுப்பு மற்றும் இனரீதியான விவரக்குறிப்பின் அரசியலை நிராகரிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
“தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமற்றதாக இருக்கும்போது கிளந்தான் மக்களுக்கு விளக்க இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.”
“இந்த, சீன எதிர்ப்பு, மலாய் எதிர்ப்பு, இந்தியர்கள் எதிர்ப்பு, அரசியல் ஆரோக்கியமற்ற நிலையைக் காட்டுகிறது. எப்படி நாம் முன்னோக்கி செல்ல முடியும்? நாம் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால், எப்படி வளர்ச்சியடையவும், கல்வியில் கவனம் செலுத்தவும் முடியும்?” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சைட், கடந்த ஜனவரி 10-ஆம் தேதி, சுவா சின் ஹுய்க்கு பதிலாக கிளந்தான் மாநில ஜசெக தலைவராக நியமிக்கப்பட்டார்.
“பல்வேறு கட்சிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மத்திய அரசாங்கத்துடன் நட்பாக இருக்குமாறு கிளந்தான் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஏதாவது தேவைப்பட்டால் நான் உதவுவேன், அவர்களிடம் ஆதரவைக் கேட்க அமைச்சர்களை நான் சந்திக்க முடியும்.” என்று அவர் கூறினார்.