Home One Line P2 பெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்

பெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்

956
0
SHARE
Ad

சென்னை – தமிழக அளவிலும், அனைத்துலக அளவிலும், தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், சேவையாளர்கள், இயக்கங்கள் ஆகியோருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 20) தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்த விழாவில் அயலகத் தமிழர்களுக்கென வழங்கப்பட்ட “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” என்ற சிறப்பு விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு வழங்கி சிறப்பித்தார்.

2019-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்பட்டன.

அயலகத் தமிழர்களுக்கென வழங்கப்பட்ட விருதுகளைப் பெறும் மூவரில் இராஜேந்திரனும் ஒருவராவார். உலகத் தமிழ்ச்சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் பெற்றார்.

#TamilSchoolmychoice

ஒரு இலட்ச ரூபாய், தகுதி உரை, சான்றிதழ் ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய நிகழ்ச்சியில் இராஜேந்திரனுக்கு வழங்கி கெளரவித்தார்.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இலக்கிய உறவுப் பாலத்தை ஏற்படுத்தி அதனை வலுவடையச் செய்ததில், தொடரச் செய்ததில் இராஜேந்திரன் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். மலேசிய தமிழ் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியத்திற்கும் தமிழ்நாட்டில் பரவலான அறிமுகத்திற்கும் அங்கீகாரத்திற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் இராஜேந்திரன்.

நீண்டகாலமாக, மலேசியாவின் முன்னணி நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இராஜேந்திரன் நீண்ட காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றி, தமிழகத்துக்கும் மலேசியாவுக்கும் இடையில் தமிழ் மொழி அடிப்படையிலான உறவு முகிழ்க்கவும், தழைக்கவும் பல முனைகளில் பணியாற்றியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் மேற்கொண்டு வரும் இந்த பணிகளால் தமிழகப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் மலேசிய இலக்கியங்கள் பாட நூலாக அறிமுகம் செய்யப்படுவதற்கு அவர் பெரும் பங்காற்றி இருக்கிறார். இத்தகைய சேவைகளுக்கு அங்கீகாரமாக தமிழக அரசு 2019-ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.