சென்னை – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அதிகாரபூர்வ அரசாணையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இலக்கியம், இலக்கணம், மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவதாகவும், அந்த வரிசையில் 2019-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருதுக்கு பெ.இராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜனவரி 20-ஆம் தேதி காலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீண்டகாலமாக, மலேசியாவின் முன்னணி நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இராஜேந்திரன் மலேசியாவிலும் பலமுறை சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். பல்வேறு இலக்கியப் படைப்புகளை படைத்திருக்கும் இராஜேந்திரன் நீண்ட காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றி, தமிழகத்துக்கும் மலேசியாவுக்கும் இடையில் தமிழ் மொழி அடிப்படையிலான உறவு முகிழ்க்கவும், தழைக்கவும் பல முனைகளில் பணியாற்றியிருக்கிறார்.
2019 தமிழ் வளர்ச்சி விருதுகள் வழங்கும் விழாவில் இராஜேந்திரனுக்கான விருதும் வழங்கப்படுகிறது என்பதோடு, மேலும் பல துறைகளில் பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசின் அரசாணைக் குறிப்பு தெரிவிக்கிறது.