கோலாலம்பூர்: முகநூல் பயன்பாட்டைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் மறுத்தார்.
தமிழில் அவருக்கு வழக்கு தொடர்பாக நீதிபதி முகமட் ஜாமில் ஹுசேன் முன்னிலையில் வாசித்த பின்னர், ஜி. சாமிநாதன், 35, இவ்வாறு வாக்குமூலம் அளித்தார்.
தம்மை விசாரிக்கும்படி சாமிநாதன் நீதிபதி முகமட் ஜாமீலிடம் தெரிவித்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் “ஜிசாமி நாதன் சிவா” என்ற முகநூல் கணக்கு மூலமாக புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டம் பிரிவு 130 ஜே (1) கீழ் சாமிநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். மேலும், அவர் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த விரும்பிய எல்லா பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்.