புதுடில்லி – உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் விமான சேவைக்கான சந்தையாகக் கருதப்படுவது இந்தியாவாகும். இங்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் கணிசமான சந்தையைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனுடன் போட்டி போடத் தயாராகி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
இதற்காக இந்திய விமானப் பயணச்சந்தைக்காக கூடுதல் விமானங்களை வாங்கிக் களத்தில் இறங்க முனைந்துள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். இந்த முயற்சியில் அதனுடன் கைகோர்த்திருப்பது அதன் இந்திய கூட்டு வணிகப் பங்காளியான விஸ்தாரா ஆகும். விஸ்தாரா நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியாவில் பல்வகை வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் கொண்டிருக்கிறது.
போயிங் நிறுவனத்திடமிருந்து 787 டிரீம்லைனர் ஜெட் விமானங்களை வாங்குவதற்கு விஸ்தாரா பரிசீலனை செய்து வருகிறது. இந்த இரக விமானம் ஒன்றின் அடிப்படை விலையே 250 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
மற்றொரு விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்தும் விமானங்களை வாங்க விஸ்தாரா பரிசீலனை செய்கிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அதிகமான பயணிகள் செல்லும் நிலையில் அந்த இலாபகரமான சந்தையைத் தற்போது எமிரேட்ஸ் மற்றும் எத்திஹாட் நிறுவனங்கள் பெருமளவில் கைப்பற்றியிருக்கின்றன.
அதனை முறியடிக்கும் விதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தென் கிழக்காசிய வட்டாரத்தில் தொடர்ந்து மலிவு விலை விமான நிறுவனங்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்நோக்கி வருகிறது.
அதைச் சமாளிக்கவே, இந்தியச் சந்தையை அந்நிறுவனம் குறிவைத்திருக்கிறது என வணிக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.