Home One Line P1 சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்

1174
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்திற்கு (படம்) எதிராக வழக்கு ஒன்றைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளனர்.

மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவின் வலைப் பதிவில் அவர்கள் கூறியிருக்கும் உண்மையற்ற தகவல்களை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என சண்முகம் உத்தரவிட்டது தொடர்பில் அவர்கள் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.

கோலாலம்பூர் டைம் & கமானி வழக்கறிஞர்கள் நிறுவனத்தின் சார்பில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கில் எல்எப்எல் சென்டிரியான் பெர்ஹாட் (LFL Sdn Bhd) மற்றும் அதன் ஆலோசகர் என்.சுரேந்திரன் வாதிகளாகவும், சண்முகம் ஒரே பிரதிவாதியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரின் சர்ச்சைக்குரிய பொய்ச் செய்திகளுக்கான சட்டத்தின் கீழ் சண்முகம் அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். எனினும் அந்த உத்தரவு செல்லாது என்றும் வாதிகளுக்கு எதிரான அந்த உத்தரவை அமுலாக்க முடியாது என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வாதிகள் தங்களின் வழக்கு மனுவில் கோரியிருக்கின்றனர்.

பொய்ச் செய்திகளுக்கான சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் (Protection from Online Falsehoods and Manipulation Act 2019 (Pofma), வரையறுக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை சண்முகமோ அல்லது அவரது அதிகாரத்தைப் பிரதிநிதிக்கும் பிறரோ நடைமுறைப்படுத்தவோ, அமுல்படுத்தவோ முடியாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வாதிகள் தங்களின் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சண்முகம் விடுத்திருக்கும் உத்தரவானது நாடு தாண்டிய அமுலாக்கத்தைக் கொண்ட உத்தரவு என்றும் மலேசியர்களின் அடிப்படை மனித உரிமைகளை அது பாதிக்காது என்றும் மனித உரிமை வழக்கறிஞர்களின் குழுவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரான குர்டியால் சிங் தெரிவித்திருக்கிறார்.

சிங்கை சாங்கி சிறைச்சாலையில் நீதிமன்றத் தண்டனைக்கேற்ப நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனைகளில் சட்டத்துக்கு புறம்பான முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என மலேசிய மனித உரிமை வழக்கறிஞர்கள் தொடர்ந்து சாடி வருகின்றனர்.

இதன் தொடர்பில் தங்களுக்கு சிங்கப்பூர் சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் தகவல்கள் கிடைத்ததாகவும் எனினும் சிங்கப்பூர் அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டாலும் அவர்களிடமிருந்து பதில் ஏதும் இல்லை என்றும் மலேசிய மனித உரிமை வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து சிங்கை அரசாங்கத்தின் அதிகாரத்துவ இணையத் தளத்தில் மலேசிய மனித உரிமை வழக்கறிஞர்கள் குழுவின் குற்றச்சாட்டுகளில் உண்மைகள் திரித்துக் கூறப்பட்டிருக்கின்றன என்று அறிக்கை ஒன்றின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பொய்ச் செய்திகள் சட்டங்களின்படி, திருத்தப்பட்ட செய்தியொன்று வெளியிடப்பட வேண்டும் என்றும் மலேசிய மனித உரிமை வழக்கறிஞர்கள் குழு ஏற்கனவே பதிவிட்ட செய்தியில் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதைத் தெரிவிக்க வேண்டும் எனவும் சிங்கை அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில்தான் மலேசிய மனித உரிமை வழக்கறிஞர்கள் குழு தங்களின் வழக்கை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.